கடந்த வாரம் கல்லூர் மஞ்சுவிரட்டில் பாதுகாப்புப் பணி யிலிருந்த நவநீதகிருஷ்ணன் என்ற போலீஸ்காரரும் சுப்பிரமணியன் என்ற பார்வையாளரும் காளைகள் முட்டியதில் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கல்லூர் கிராமத்தில் உள்ள அரியநாயகி மாரியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, செம்முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் சுமார் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தொடக்கத்தில் வரிசையாக அவிழ்க்கப்பட்ட காளைகள், பின்னர் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏராளமான காளைகள் பார்வையாளர்கள் நிற்கும் பக்கங்களிலும் ஓடின.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jalikattu_0.jpg)
பொதுமக்கள் நிற்கும் பக்கம் கருப்புக்காளை ஒன்று வருவதைப் பார்த்த டாடா ஏஸ் வாகனத்தில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த மீமிசல் காவல் நிலைய காவலரான நவநீதகிருஷ்ணன் (32) இளைஞர்களை அப்புறப்படுத்த கீழே இறங்கி விரட்டிக்கொண்டிருந்த நேரத்தில் கருப்புக் காளை அவரைத் தூக்கி வீசியது.
பலத்த காயமடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அறந்தாங்கி யைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி சபரி, அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணி செய்கிறார். இவர்களுக்கு மிதுன்சக்கரவர்த்தி, கீர்த்திவாசன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இளம்வயதிலேயே பணியிடத்தில் காளை முட்டி உயிரிழந்த போலீஸ்காரர் நவநீதகிருஷ்ணன் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபிறகு நவநீதகிருஷ் ணன் உடலை, தானே முன்னின்று தூக்கிச் சென்றார். போலீசார் அணிவகுப்புடன் 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அதே பகுதியிலுள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
நவநீதகிருஷ்ணனுக்கு அஞ்சலிசெலுத்த வந்திருந்த போலீசார், "தமிழ்நாட்டிலேயே அதிகமான ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டம் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள்தான். பேரிடர் மீட்புக் குழுபோல, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு குழு என்ற ஒன்றை உருவாக்கி அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உடைகள், ஹெல்மெட் போன்ற உபகரணங்களைக் கொடுத்து ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்திக்கொண்டு, பிறகு அவர்களை வழக்கமான பணிக்கு பயன்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்''’என்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/jalikattu-t.jpg)